தேவனை சார்ந்திருத்தல்

இந்த தியானத்தை வாசிக்கும் முன்பு, தயவுசெய்து 73ஆம் சங்கீதத்தை ஒருமுறையாவது தியானிக்கும்படியாய் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த சங்கீதம் முழுவதும், இவ்வுலகில் வாழும் ஒரு தேவ பிள்ளையின் வாழ்க்கையும், உலக மக்களின் வாழ்க்கையும் ஒப்பிட்டு கூறப்பட்டுள்ளது.  இச்சங்கீதம் ஆசாப்பின் சங்கீதம் என்று கூறப்பட்டுள்ளது.  இங்கு ஆசாப்பின் பார்வையில், உலக மக்களின் வாழ்க்கை, ஒரு தேவ பிள்ளையின் வாழ்வை காட்டிலும் செழிப்பானதாயும், ஆசிர்வாதமானதாயும், பாதுகாப்பு நிறைந்ததாயும் காணப்படுகிறது.  அதனால், அவர்களுடைய வாழ்க்கை பெருமையினாலும், தங்களை படைத்த இறைவனையே மட்டுபடுத்துவதாகவும் காணப்படுகிறது (சங் 73:3-12).

இன்று, இவ்வுலகில் வாழும் தேவ பிள்ளைகளாகிய நம்முடைய பார்வையும், உலக மக்களின் வாழ்க்கையை காணும்பொழுது இப்படியாகவே காணப்படுகிறது.  உலகில் உள்ள எத்தனையோ கோடிக்கணக்கான மக்கள், தங்களை சிருஷ்டித்த சிருஷ்டிகரை குறித்து எந்த அறிவும் இல்லாமல், அதை அறிந்து கொள்ள விருப்பமும் இல்லாமல், உலகத்தின் காரியத்தின் பின்னே ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

எத்தனையோ மிகப்பெரிய வியாபாரிகளும், அரசியல்வாதிகளும், சினிமா நட்சத்திரங்களும், விளையாட்டு வீரர்களும், தங்கள் செல்வத்தையும், அதிகாரத்தையும், அழகையும், உடல் பெலத்தையும் நம்பி அவற்றை பெருமையாய் எண்ணி, அதையே தங்கள் உலகம் (வாழ்க்கை) என்று கருதி ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

தேவனை பற்றியோ, சத்திய வழியை பற்றியோ எந்த எண்ணமும் இன்றி வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்கள் வாழ்க்கையை நாம் காண்கையில், அவர்கள் வாழ்க்கையில் எந்த இடையூறும் இன்றி, அவர்கள் எதற்காக ஓடுகிறார்களோ அது அவர்களுக்கு வாய்ப்பதையும், அதனிமித்தம் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் சுக ஜீவிகளாய் வாழ்ந்து மனதின் பிரகாரமாகவோ, சரீர பிரகாரமாகவோ எந்த உபத்திரவமும் இன்றி வாழ்வதையும் காண்கிறோம்.

இதனால் அவர்கள் தேவனை மட்டுபடுத்துவதுடன், தங்கள் செல்வத்தை, அதிகாரத்தை, புகழை தக்க வைத்துக்கொள்ள, மற்ற மனிதர்களுக்கு தீங்கிழைப்பதையும் நாம் காண்கிறோம்.  “மேலும், கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக” என்று II தீமோ 3:1 கூறுகிறது.  அது “எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும்” இருப்பார்கள் என்றும் II தீமோ 3:2 கூறுகிறது.

அதே நேரத்தில் ஒரு தேவ பிள்ளையின் வாழ்வை குறித்து 73ஆம் சங்கீதத்தில் ஆசாப் கூறும்பொழுது “நான் விருதாவாகவே என் இருதயத்தைச் சுத்தம்பண்ணி, குற்றமில்லாமையிலே என் கைகளைக் கழுவினேன்.  நாள்தோறும் நான் வாதிக்கப்பட்டும், காலைதோறும் தண்டிக்கப்பட்டும் இருக்கிறேன்” என்கிறார் (சங் 73:13,14).

இங்கு ஆசாப் கூறுகிறபடி, இப்பொழுது நம் வாழ்க்கையிலும் காணப்படுகிறது.  நாம் நீதியாய் வாழ்வதினாலும், சத்தியத்தை பின்பற்றுவதினாலும் நமக்கு இவ்வுலகத்திலிருந்தும், இவ்வுலக மக்களிடமிருந்தும் எந்த நன்னையும் கிடைப்பதில்லை.  அதற்கு பதிலாக தேவையில்லாத பிரச்சனைகளும், வாழ தெரியாதவர்கள், பிழைக்க தெரியாதவர்கள் என்ற பட்டமே தேவ பிள்ளைக்கு கிடைக்கிறது.

இங்கு நாம் காண்கிறபடி, ஒருபக்கம் தன் சுய பெலத்தை, ஞானத்தை, அதிகாரத்தை, அழகை நம்பி, இவ்வுலக வாழ்க்கையை வாழும் மக்கள்,   மறுபக்கத்தில் தேவனை சார்ந்து வாழும் தேவ பிள்ளைகள்.  மேலோட்டமாக, இவ்வுலக நடைமுறையை பார்க்கும் பொழுது, தங்களையே சார்ந்துகொள்ளும் உலக மக்கள், தேவனை சார்ந்துகொள்ளும் தேவ பிள்ளையை விட உயர்ந்து, செழித்து இருப்பதை போல காணப்படலாம்.

ஆனால் அதே சங்கீதத்தில் “இதை அறியும்படிக்கு யோசித்துப்பார்த்தேன்; நான் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்து,அவர்கள் முடிவைக் கவனித்து உணருமளவும், அது என் பார்வைக்கு விசனமாயிருந்தது. நிச்சயமாகவே நீர் அவர்களைச் சறுக்கலான இடங்களில் நிறுத்தி, பாழான இடங்களில் விழப்பண்ணுகிறீர்.  அவர்கள் ஒரு நிமிஷத்தில் எவ்வளவு பாழாய்ப்போகிறார்கள்! பயங்கரங்களால் அழிந்து நிர்மூலமாகிறார்கள்” (சங் 73:16-19) என்று ஆசாப் கூறுகிறார்.

இதிலிருந்து, தேவன் நீதியுள்ளவர் என்பதையும், துன்மார்க்கரின் வாழ்வை சடுதியில் முடிய பண்ணுகிறார் என்பதையும், அவர்கள் ஒரு நிமிஷத்தில் பாழாய் போவார்கள் என்பதையும் நாம் காணலாம்.  நாம் வாழுகிற இக்காலத்திலும் துன்மார்க்கமாய் ஜீவித்த மக்களின் பரிதாப முடிவை நாம் கண் கூடாக காண்கிறோம்.  அவர்களுடைய செல்வமோ, பதவியோ, பட்டமோ, அழகோ, உடல் பலமோ அவர்களுக்கு உதவாமற் போய் அழிந்துபோவதை நாம் கண்டுகொண்டிருக்கிறோம்.

அதே நேரத்தில், சில துன்மார்க்கரை அவர்கள் மரணத்திற்கு பிறகு நியாயந்தீர்க்க அவர்களை தேவன் விட்டுவைத்திருக்கிறார்.  இதுவே லாசரு-ஐசுவரியவான் வாழ்க்கையில் நடந்தது.  எனவே, தேவனையே சார்ந்திருக்கும் ஒரு தேவ பிள்ளை எந்நிலையில் இருந்தாலும், அவனை இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் பாதுகாத்து வழிநடத்த தேவன் வல்லவராயிருக்கிறார். அதனால்தான் சங்கீதம் 73:23,24 வசனங்களில் “ஆனாலும் நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன்; என் வலதுகையைப் பிடித்துத் தாங்குகிறீர்.  உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்” என்று ஆசாப் கூறுகிறார்.

மேலும் “இதோ, உம்மைவிட்டுத் தூரமாய்ப்போகிறவர்கள் நாசமடைவார்கள்; உம்மைவிட்டுச் சோரம்போகிற அனைவரையும் சங்கரிப்பீர்.  எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்” என்றும் சங்கீதம் 73:27,28 வசனங்களில் கூறுகிறார்.  எனவே, ஒரு தேவ பிள்ளை இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும், தேவனை அண்டி வாழ்வதே (சார்ந்து வாழ்வதே) நலமான ஒன்றாகும்.

மேலும், ஒரு தேவ பிள்ளை அனுபவிக்கும் “இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்ல” (ரோ 8:18) என்று வேதம் கூறுகிறது.  மேலும் “உத்தமனுக்குக் கர்த்தர் துணை” (II நாளா 19:11) என்றும், “நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு; அந்த மனுஷனுடைய முடிவு சமாதானம்” (சங் 37:37) என்றும் வேதம் கூறுகிறது.

மேலும் “உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்” (ஏசா 26:3) என்றும் வேதம் கூறுகிறது.  எனவே இவ்வுலக மக்களின் போக்கை பாராமல், தேவனையே நோக்கிப் பார்த்து, அவரையே சார்ந்திருந்து, நம் வாழ்க்கையை நடத்துவோமானால், இம்மைக்கும், மறுமைக்கும் வேண்டிய சகலவற்றையும் தேவன் நமக்கு தந்தருளுவார். அவருக்கே மகிமையுண்டாவதாக. ஆமென்.

குறிப்பு: மேற்கண்ட தியானத்தை pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.