இவ்வுலகத்தில் மனிதர்கள் எத்தனையோ காரியங்களையும், பொருள்களையும், மனிதர்களையும் நோக்கி ஓடுகிறார்கள். பிற மனிதர்களுடைய அன்பிற்காகவும், ஐக்கியத்திற்காகவும், மேலும் பல பொருள்களை அடைவதற்காகவும் பிரயாசபடுகின்றனர். ஏனெனில், அவைகள் தங்கள் வாழ்க்கையில் தங்களோடு இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். இவையாவும் நல்லதே. ஆனால், ஒரு மனித வாழ்க்கை பயணத்திற்கு இன்றியமையாதது தேவ பிரசன்னமேயாகும்.
இவ்வுலகில் நாம் விரும்புவது எதுவும் நம்மிடத்தில் இருந்தாலும், இல்லாவிட்டலும் தேவ பிரசன்னம் நமக்கு அவசியம் தேவை. ஏனெனில், தேவ பிரசன்னமே நாம் வாழும் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தத்தை கொடுக்கிறது. தேவ பிரசன்னமே, தேவ சத்தத்தை அனுதினமும் கேட்பதற்க்கும், தேவ உறவை ஒவ்வொரு நொடிபொழுதும் உணர்வதற்க்கும் நமக்கு வழிசெய்கிறது.
ஆதாம், ஏவாளோடு தேவ பிரசன்னம் பரிபூரணமாய், பிரத்தியட்சமாய் இருந்தது. ஆனால், அவர்களோ அதை இழந்து போனார்கள். அப்போஸ்தலர்கள் தேவ பிரசன்னத்தால் நிரம்பி இருந்தனர். ஏனெனில், கிறிஸ்து அவர்களோடு வாழ்ந்தார், அனுதினமும் அவர்களோடு பேசினார், உண்டார், உறங்கினார், பல காரியங்களை அவர்களுக்கு கற்றுக்கொடுத்தார். பூமியில், அதுவும் மாம்ச சரீரத்தில் இருக்கும்பொழுது, தேவனோடு இவ்வளவு ஐக்கியமாய் இருப்பது அவர்களுக்கு கிடைத்த பாக்கியம்.
ஆனால் கிறிஸ்து பரமேற வேண்டிய வேளை வந்தபொழுதோ, பரிசுத்த ஆவியானவரின் முலமாய் தமது பிரசன்னத்தை அவர்களுக்கு வெளிபடுத்தினார். பெந்தெகொஸ்தே நாளில் சிஷர்கள் ஆவியை பெற்றபொழுது, அவர்கள் ஆண்டவராகிய கிறிஸ்து இயேசு தங்களோடு இருக்கிறார் என்ற நம்பிக்கையை வல்லமையாய் வெளிபடுத்தினர். “வெள்ளியும் பொன்னும் என்னிடத்தில் இல்லை; என்ணிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்” (அப் 3:6) என்று அப்.பேதுருவால் தைரியமாய் கூற முடிந்தது.
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர, சகோதிரிகளே கிறிஸ்துவின் பிரசன்னத்தை ஒவ்வொரு நொடிபொழுதும் நம் வாழ்வில் காண வாஞ்சிப்போமாக. ஆண்டவரின் பிரசன்னத்தோடு நம் வாழ்க்கையில் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கும்பொழுது, நம் வாழ்வில் நாம் ஒருபோதும் இடறி விழமாட்டோம். பிற மனிதர்களின் ஐக்கியத்தை காட்டிலும், வாழ்வில் நாம் பெற்றிருக்கும் அல்லது பெற வாஞ்சிக்கும் எந்த பொருட்கள் தரும் சந்தோஷத்தை காட்டிலும், தேவ பிரசன்னம் நமக்கு அளவில்லாத சமாதானத்தையும், சந்தோஷத்தையும் எப்பொழுதும் தரும்.
கிறிஸ்துவின் வருகையில் நாம் வாஞ்சிப்பதும் இந்த தேவ பிரசன்னத்தையே. ஆம், கிறிஸ்து வரப்போவது நம்மை அவரோடு எப்பொழுதும் வைத்துக்கொள்ளவே. அதிலும், மரணத்தை காணாமல் மகிமை அடைந்த சரீரத்தோடு, அவரண்டை சேர்வது மேலான பாக்கியம். அப்படிபட்ட மேலான பாக்கியத்தை பெற, நாம் அப்.பவுலை போல எப்பொழுதும் தேவ பிரசன்னத்தால் நிரம்பி இருக்க வேண்டும். அப்.பவுல் கைது செய்யப்பட்டு பலவித துன்பத்திற்குள்ளாக சென்ற வேளையிலும் அவரோடு இருந்த தேவ பிரசன்னம் சொல்லிமுடியாது. பின்வரும் வசனத்தை தியானித்து பாருங்கள்.
“மிகுந்த கலகம் உண்டானபோது, பவுல் அவர்களால் பீறுண்டுபோவானென்று சேனாபதி பயந்து, போர்ச்சேவகர் போய், அவனை அவர்கள் நடுவிலிருந்து இழுத்துக் கோட்டைக்குக் கொண்டுபோகும்படி கட்டளையிட்டான். அன்று இராத்திரியிலே கர்த்தர் பவுலின் அருகே நின்று : பவுலே, திடன் கொள்; நீ என்னைக் குறித்து எருசலேமிலே சாட்சிகொடுத்தது போல ரோமாவிலும் சாட்சிகொடுக்க வேண்டும் என்றார்” (அப் 23: 10,11).
பவுல் ஒருபக்கம் மரணபோராட்டத்தில் இருந்தார், கிறிஸ்துவை போல பவுலையும் கொலை செய்து விடவேண்டும் என யூதர்கள் எண்ணினர் (அப் 23: 12). அப்படிபட்ட சூழ்நிலையின் மத்தியிலும், கர்த்தராகிய இயேசு, அண்ட சராசரங்களையும் தமது கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கிறவர், சகல ஜீவராசிகளுக்கும் ஜீவனை கொடுத்து வாழ வைத்து கொண்டிருப்பவர், அந்த ஒரு மனிதனின் (பவுல்) அருகே வந்து நின்று அவனோடு பேசுவதே, தேவ பிரசன்னத்தின் மகிமையும் மகத்துவமாகும். ஆம், பவுலுக்கு ஆண்டவர் ஏதோ உறக்கத்தில் தரிசனம் தரவில்லை, தமது வார்த்தையை மட்டும் அனுப்பவில்லை. அதிலும் மேலாக, பவுல் அருகே வந்து நின்று ஒரு தாயைப் போல அவரை தேற்றுகிறார், திடப்படுத்துகிறார்.
இப்படிபட்ட அனுபவமே நமக்கும் தேவை. தேவனோடு அவருடைய வருகையில் எடுத்துக்கொள்ளப்பட்டு, அவரோடு நித்திய காலமும் இருப்பது போலவே, இவ்வுலகில் வாழ்கின்ற இந்த நாட்களிலேயே, பவுலை போல நாமும் தேவ பிரசன்னத்தை அனுபவிப்போமானால், அதுவே இவ்வுலகில் நாம் பெறும் மேலான பாக்கியமாகும். கர்த்தர்தாமே அப்படிப்பட்ட கிருபையை நம் ஒவ்வொருவருக்கும் அருள்வாராக. அல்லேலுயா, ஆமென்.