ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், கிறிஸ்துவுக்குள்ளான சகோதர, சகோதரிகள் யாவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள். சிந்தனை துளிகள் என்றும் இந்த புதிய தியானத் தொடரில், வேத வசனங்களின் மகத்துவங்களை, சொல்லும் செய்திகளை இரத்தின சுருக்கமாக தியானிக்க இருக்கிறோம்.
துளி 1:
உங்களுக்கு உள்ளவைகளை விற்றுப் பிச்சைகொடுங்கள் (லூக்கா 12:33)
தேவன் நமக்கு இவ்வுலகத்தில் கொடுத்திருக்கும் ஆவிக்குரிய ஆசிர்வாதங்கள், பூமிக்குரிய நன்மைகள் யாவும், நமக்கு ஈவாக கொடுக்கப்பட்டவையே. அப்படி ஈவாக கொடுக்கப்பட்டவைகளை நாம் பிறருக்கும் எந்தவித எதிர்பார்பும்மின்றி பகிர்ந்து கொடுக்கும் பொழுது, பரலோகத்தில் நமக்கு பொக்கிஷம் சேர்த்து வைக்கப்படுகிறது (லூக் 12:33). பூமியிலும் தொடர்ந்து நமக்கு வேண்டிய அனைத்தும் தேவனால் அருளப்படுகிறது. ஆதி அப்போஸ்தல காலத்தில் இதனையே அப்போஸ்தலர்கள் திருச்சபையில் கடைப்பிடித்தனர். ஆவிக்குரிய ஆசிர்வாதங்களை பகிர்ந்து கொடுத்தனர், பூமிக்குரிய நன்மைகளை பகிர்ந்து அனுபவித்தனர். பரலோகத்தில் தங்கள் பொக்கிஷத்தை சேர்த்து வைப்பதே மேன்மை என்று உணர்ந்தனர். இன்றும் இதை நாம் செய்வோமானால், பலவித ஆவிக்குரிய ஆசிர்வாதங்களையும், பூமிக்குரிய நன்மைகளையும் நாம் திருச்சபை மத்தியிலும், ஊழிய ஸ்தலங்களிலும் கொண்டுவர முடியும். தேவன் தாமே இதற்கு, தமது கிருபையை பாராட்டுவாராக. ஆமென்.