கர்த்தரின் வழி

கர்த்தரின் வழி உத்தமர்களுக்கு அரண், அக்கிரமக்காரருக்கோ கலக்கம். (நீதி 10:29)

ஆம் கர்த்தர் காட்டிய வழியில் நம் வாழ்க்கை பயணிக்கும் பொழுது ஒரு பாதுகாப்பை நம் வாழ்வில் நாம் உணர்கிறோம்.  நாம் கர்த்தருடைய வழியில் நடக்கிறோம், தேவன் நம்மை பார்த்துக்கொண்டிருக்கிறார், ஒரு பொல்லாப்பும் நம்மை அணுகாதபடி காப்பார் என்ற நம்பிக்கை நமக்கு உண்டு.  ஆனால் அக்கிரமக்காரருக்கோ அதே வழி கலக்கத்தை ஏற்படுத்தும். அவர்கள் ஒருபோதும் நீதியின் வழியாகிய, உத்தம பாதையாகிய கர்த்தரின் வழியை தெரிந்து கொள்ளமாட்டார்கள்.  “உத்தமமாய் நடக்கிறவன் பத்திரமாய் நடக்கிறான்; கோணலான வழிகளில் நடக்கிறவனோ கண்டுபிடிக்கப்படுவான்.” (நீதி 10:9) என்று வேத வசனம் கூறுகிறது. “இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.  ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.” (மத் 7:13,14).  ஆம், குறுகிய வாசல் வழியாய் நடக்க ஜாக்கிரதையோடு, இந்த பக்கம் அந்த பக்கம் சாயாமல், ஒரே சீராய், ஒரு கட்டுபாட்டோடு நடக்கவேண்டும்.  கேட்டுக்குப் போகிற வழியோ, விசாலமானதால், ஏனோ தானோவென்று நடக்கலாம்.  ஆனால் அதின் முடிவோ மரணம்.  “நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை.” (நீதி 12:28)“ஆகிலும் நாம் எதுவரையில் தேறியிருக்கிறோமோ, அதுமுதல் ஒரே ஒழுங்காய் நடந்துகொண்டு, ஒரே சிந்தையாயிருப்போமாக.” (பிலி 3:16).  ஆகவே கர்த்தரின் வழியையே தெரிந்து கொள்வோம்.  “உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்.” (சங் 73:24) என்ற வசனத்தின் படி கர்த்தர்தாமே நம்மை நடத்தி நித்திய ஜீவகரையில் சேர்பாராக.  ஆமென், அல்லேலூயா.

Leave a Reply