கர்த்தரால் வரும்

காரியசித்தியோ கர்த்தரால் வரும். (நீதி 16:33)

நாம், நம் வாழ்க்கையில் எத்தனையோ காரியங்களுக்காக பிரயாசப்படுகிறோம்.  ஆவிக்குரிய காரியங்களிலும், உலகபிரகாரமான காரியங்களிலும் நமக்கு தேவைகள் உண்டு.  ஒவ்வொரு நாளும் அதற்காக நாம் உழைக்கிறோம்.  ஆனால், வேதம் சொல்கிறது “காரியசித்தியோ கர்த்தரால் வரும்” என்று.  ஆம் “குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்.” (நீதி 21:31).  நாம் ஒருவேளை இந்த இந்த காரியம், இந்த இந்த வேளைகளில் இப்படியாக நடந்தால் நன்மையாக இருக்குமே என்று நினைக்கலாம்.  ஆனால் வேதம் கூறுகிறது “ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு.” (பிர 3:1).  மேலும் “அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்” (பிர 3:11) என்றும் வேதம் தெளிவாக கூறுகிறது.  ஆபிரகாம், யோசேப்பு, மோசே, தாவீது என்று பழைய ஏற்பாட்டின் பரிசுத்தவான்கள் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒரு காலதிட்டத்தை அவர்கள் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த ஆண்டவர் வைத்திருந்தார்.

புதிய ஏற்பாட்டில் வேதம் சொல்கிறது “காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனைத் தேவன் அனுப்பினார்.” (கலா 4:5) என்று.  சவுலை பவுலாக்க தேவன் ஒரு நாளை வைத்திருந்தார்.  எனவே ஊழியக்காரியமானாலும், உலகபிரகாரமான வாழ்க்கையின் தேவைகள் எதுவானாலும் ஆண்டவர் நமக்கு தரும் நேரத்திலேயே அது கை கூடி வரும்.  அதுவரை நாம் பொறுமையாய் இருக்க வேண்டும்.  நம் சொந்த முயற்சியில், புத்தியில் அதை செய்யலாம் என்று நினைத்தாலோ அல்லது பொறுமையின்றி அந்த காரியத்தை விட்டுவிட்டாலோ நஷ்டம் நமக்குதான்.  எனவே கர்த்தருடைய நேரத்திற்கு காத்திருப்போம். “ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்.” (1 பேதுரு 5:6).  ஆமென், அல்லேலூயா.

கர்த்தரின் வழி

கர்த்தரின் வழி உத்தமர்களுக்கு அரண், அக்கிரமக்காரருக்கோ கலக்கம். (நீதி 10:29)

ஆம் கர்த்தர் காட்டிய வழியில் நம் வாழ்க்கை பயணிக்கும் பொழுது ஒரு பாதுகாப்பை நம் வாழ்வில் நாம் உணர்கிறோம்.  நாம் கர்த்தருடைய வழியில் நடக்கிறோம், தேவன் நம்மை பார்த்துக்கொண்டிருக்கிறார், ஒரு பொல்லாப்பும் நம்மை அணுகாதபடி காப்பார் என்ற நம்பிக்கை நமக்கு உண்டு.  ஆனால் அக்கிரமக்காரருக்கோ அதே வழி கலக்கத்தை ஏற்படுத்தும். அவர்கள் ஒருபோதும் நீதியின் வழியாகிய, உத்தம பாதையாகிய கர்த்தரின் வழியை தெரிந்து கொள்ளமாட்டார்கள்.  “உத்தமமாய் நடக்கிறவன் பத்திரமாய் நடக்கிறான்; கோணலான வழிகளில் நடக்கிறவனோ கண்டுபிடிக்கப்படுவான்.” (நீதி 10:9) என்று வேத வசனம் கூறுகிறது. “இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.  ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.” (மத் 7:13,14).  ஆம், குறுகிய வாசல் வழியாய் நடக்க ஜாக்கிரதையோடு, இந்த பக்கம் அந்த பக்கம் சாயாமல், ஒரே சீராய், ஒரு கட்டுபாட்டோடு நடக்கவேண்டும்.  கேட்டுக்குப் போகிற வழியோ, விசாலமானதால், ஏனோ தானோவென்று நடக்கலாம்.  ஆனால் அதின் முடிவோ மரணம்.  “நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை.” (நீதி 12:28)“ஆகிலும் நாம் எதுவரையில் தேறியிருக்கிறோமோ, அதுமுதல் ஒரே ஒழுங்காய் நடந்துகொண்டு, ஒரே சிந்தையாயிருப்போமாக.” (பிலி 3:16).  ஆகவே கர்த்தரின் வழியையே தெரிந்து கொள்வோம்.  “உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்.” (சங் 73:24) என்ற வசனத்தின் படி கர்த்தர்தாமே நம்மை நடத்தி நித்திய ஜீவகரையில் சேர்பாராக.  ஆமென், அல்லேலூயா.

கர்த்தரின் ஆசிர்வாதம்

கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார் (நீதி 10:22).

ஆவிக்குரிய ஆசிர்வாதங்கள் மற்றும் பூமிக்குரிய நன்மைகள் யாவும் அவரால் நமக்கு கிடைக்கும் பலன்.   ஊழியங்கள், கனிகள், வரங்கள் என்பவற்றை தருபவர் அவரே.  பொன்னும், பொருளும் மட்டும் அல்ல, பெற்றோர், கணவன், மனைவி, பிள்ளைகள், சகோதர, சகோதரிகள், நண்பர்கள் என இவ்வுலகில் யாவற்றையும் நமக்கு தருபவர் அவரே.   இப்படிப்பட்ட ஆசிர்வாதங்களினால் நமக்கு இவ்வுலகிலும், மறு உலகிலும் நன்மைகள் மற்றும் மகிழ்ச்சி உண்டாகிறது.   ஆனால் சிலர் மேற் கூறப்பட்ட நன்மைகளை ஆண்டவரின் மூலம் பெற்றுக்கொள்வதற்கு பதிலாக, தங்கள் சுய புத்தியினால், பெலத்தினால், முயற்சியினால் அல்லது மற்ற மனிதர்களின் தயவினால் அவற்றை பெற முயற்சிக்கின்றனர்.   சிலர் பூமிக்குரிய பொன், பொருள்களை சம்பாதிக்கின்றனர்.  தமக்கு பிடித்தவரை மணக்கின்றனர்.   ஆனால் கர்த்தரால் தரபடாத இவை யாவற்றாலும் அவர்களுக்கு இவ்வுலகிலும், மறு உலகிலும் துன்பமே உண்டாகும், நீதி 28:20 கூறுகிறது “உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; ஐசுவரியவானாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான்” என்று.   எனவே ஆபிரகாமை போல (ஆதி 14:22,23) கர்த்தரால் வரும் நன்மைகளையே நாம் நாடி தேடுவோமாக.   அவர் நமக்கு தருபவற்றில் திருப்தியோடிருப்போம்.   நம் ஒவ்வொருவருடைய ஜெபமும் “என் படியை எனக்கு அளந்து என்னைப் போஷித்தருளும்” (நீதி 30:9) என்பதாக இருக்கட்டும்.   ஆமென், அல்லேலூயா.

புது வாழ்வு பிறந்தது

பாவ சேற்றில் வீழ்ந்து கிடந்தேன்

சோதனை புயலில் சிக்கி தவித்தேன்

வேதனையில் மூழ்கி போனேன்

வியாதி படுக்கையில் துடித்து அழுதேன்

ஏளனங்களால் ஏங்கி தவித்தேன்

பாதை தெரியா இருளில் திரிந்தேன்

வாழ்வின் விடை அறியா மெளனமானேன்

என்னை தேடி வந்தீரையா

புது வாழ்வு தந்தீரையா

பாவ கறை நீக்கி

வியாதி படுக்கை மாற்றி

புதிய பாதை காட்டி

விடை தந்தீரையா

என் வாழ்வின் வினை தீர்த்திரே ஐயா

விண்ணில் இருந்து (வந்து)

மண்ணில் உதித்து

மண்ணான என்னை

விண்ணில் சேர்த்தீரே ஐயா

பிறந்தது புது வாழ்வு  (கிறிஸ்து)

என்னில்!

அனைவருக்கும் இனிய கிறிஸ்து பிறப்பு மற்றும் புத்தாண்டு  நல் வாழ்த்துக்கள்.

உமக்கு நன்றி

காலம் எல்லாம் கண்மணிபோல் காத்த என் இறைவா – உமக்கு நன்றி

நடந்து வந்த பாதைகள் எப்படி இருப்பினும் தூக்கி சுமந்த இறைவா – உமக்கு நன்றி

கலங்கின நேரங்களில் என் கண்ணீரை துடைத்தவரே – உமக்கு நன்றி

(சூழ்நிலைகளை பார்த்து) நடுங்கின நேரங்களில் நடுவில் நின்று காத்தவரே – உமக்கு நன்றி

மரண இருளின் பள்ளத்தாக்கிலும் என்னோடே கூட இருந்தீரே – உமக்கு நன்றி

புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விட்டீரே – உமக்கு நன்றி

எந்நாளும், என் இறைவா உம் துணையின்றி எனக்கு வேறொன்றுமில்லையே.

உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் (ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து) உங்களுடனேகூட இருக்கிறேன் (மத் 28:20)

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென். (II கொ 13:14)