சிந்தனை துளிகள்: துளி – 2

பஸ்கா பண்டிகைக்கு முன்னே, இயேசு இவ்வுலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான தம்முடைய வேளை வந்ததென்று அறிந்து, தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார் (யோ 13:1) .

முடிவுபரியந்தமும் நம்மிடத்தில் அன்புகூருகிற ஒருவருண்டானால், அவர் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே.  ஆம், அதே நேரத்தில் நம்மிடமிருந்து அவர் எதிர்பார்பதும் அந்த அன்பையே.  தம்மை மறுதலித்த பேதுருவிடம் கூட நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றே கேட்டார் நம் ஆண்டவர் (யோ 21:15-17).  பிதாவாகிய தேவன் உலகத்தில் அன்புகூர்ந்தபடியினால், தமக்கு அன்பான தமது ஒரே பேறான குமாரனையே இவ்வுலக மக்களுக்காக தந்தருளினார் (யோ 3:16).  எனவே. அன்புகூருதல் இருவழி செயலாகும்.  ஒரு வேளை நாம் நமது அன்புகூருதலில் குறைந்தாலும், பிதாவாகிய தேவனுடைய அன்பும், குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் அன்பும் என்றும் மாறாதது.  மனம் திரும்பிய மைந்தனைப்போல் நாம் எப்பொழுது திரும்பி வருவோம் என்று நம் இருதய வாசற்படியில் நின்று தட்டுகிற அன்பாகும் (வெளி 3:20).  ஏனெனில் (கிறிஸ்துவின்) அன்பே பெரியது (1 கொ 13: 13). மேலும், “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே; இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை” (மாற்கு 12:30,31), ஆமென்.

சிந்தனை துளிகள்

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், கிறிஸ்துவுக்குள்ளான சகோதர, சகோதரிகள் யாவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள்.  சிந்தனை துளிகள் என்றும் இந்த புதிய தியானத் தொடரில், வேத வசனங்களின் மகத்துவங்களை, சொல்லும் செய்திகளை இரத்தின சுருக்கமாக தியானிக்க இருக்கிறோம்.

துளி 1:

உங்களுக்கு உள்ளவைகளை விற்றுப் பிச்சைகொடுங்கள் (லூக்கா 12:33)

தேவன் நமக்கு இவ்வுலகத்தில் கொடுத்திருக்கும் ஆவிக்குரிய ஆசிர்வாதங்கள், பூமிக்குரிய நன்மைகள் யாவும், நமக்கு ஈவாக கொடுக்கப்பட்டவையே.  அப்படி ஈவாக கொடுக்கப்பட்டவைகளை நாம் பிறருக்கும் எந்தவித எதிர்பார்பும்மின்றி பகிர்ந்து கொடுக்கும் பொழுது, பரலோகத்தில் நமக்கு பொக்கிஷம் சேர்த்து வைக்கப்படுகிறது (லூக் 12:33).  பூமியிலும் தொடர்ந்து நமக்கு வேண்டிய அனைத்தும் தேவனால் அருளப்படுகிறது.  ஆதி அப்போஸ்தல காலத்தில் இதனையே அப்போஸ்தலர்கள் திருச்சபையில் கடைப்பிடித்தனர்.  ஆவிக்குரிய ஆசிர்வாதங்களை பகிர்ந்து கொடுத்தனர், பூமிக்குரிய நன்மைகளை பகிர்ந்து அனுபவித்தனர்.  பரலோகத்தில் தங்கள் பொக்கிஷத்தை சேர்த்து வைப்பதே மேன்மை என்று உணர்ந்தனர்.  இன்றும் இதை நாம் செய்வோமானால், பலவித ஆவிக்குரிய ஆசிர்வாதங்களையும், பூமிக்குரிய நன்மைகளையும் நாம் திருச்சபை மத்தியிலும், ஊழிய ஸ்தலங்களிலும் கொண்டுவர முடியும்.  தேவன் தாமே இதற்கு, தமது கிருபையை பாராட்டுவாராக.  ஆமென்.